மக்கள் நலக் கூட்டணி ஏன் தோற்றது?
வெற்றி எப்படி பெற்றதாயினும் வாழ்த்துக்குரியதாகவும் தோல்வி எப்படி வந்ததாயினும் பரிகாசத்திற்குரியதாகவும் தொடர்ந்து வரும் சூழலில், மக்கள் நலக் கூட்டணி ஏன் தோற்றது என்ற கேள்வியும் கூட அர்த்தமற்றதாக தோன்றலாம். இதுவென்ன கேள்வி, மக்கள் திராவிடக் கட்சிகளை மட்டும் தான் நம்புகிறார்கள், அதை தாண்டி இதில் யோசிக்க என்னவிருக்கிறது என சிலர் கேட்கக் கூடும். எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஒருவர் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப் போனார், பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் வெள்ளம் ஆர்ப்பரித்த திருமாவளவன் அவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை, முதல் முறையாக கம்யூனிஸ்ட்கள் ஒருவர் கூட இல்லாத சட்டசபை அமைந்திருக்கிறது. ஆம், நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த உண்மைகளில் ஒன்றை கூட மறுக்கவில்லை. ஆனால் மக்கள் நலக் கூட்டணி ஏன் தோற்றது? அது கூட்டணியின் தோல்வியா, மக்களின் தோல்வியா? ஒரு உன்னத அரசியலை முன்வைத்த கூட்டணி ஏன் இப்படியொரு வீழ்ச்சியை சந்தித்தது என்பதையெல்லாம் இப்போதும் நாம் யோசித்து பார்ப்பவர்களாக நாம் இல்லையே என்பது பரிதாபத்துக்குரிய ஒன்று தான்.
1. கூட்டணியின் நம்பகத்தன்மையை சிதைத்த ஊடகங்கள்
தேர்தல் பரபரப்பு தொற்றிய ஆரம்ப காலக் கட்டங்களில் விஜயகாந்த் எந்த அணிக்கு செல்வார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு போனால் திமுக நிச்சயம் வெற்றி பெறும், பாஜக கூட்டணிக்கு போனால் பாஜக திராவிட கட்சிகளுக்கு கடினப் போட்டியாக களத்தில் நிற்கும் என்றெல்லாம் ஆரூடம் கூறிய ஊடகங்கள், விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியை தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. விசிக மதிமுக, கம்யூனிஸ்ட்கள் என்றளவில் மட்டும் இருந்தால் தங்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்றிருந்த திராவிடக் கட்சிகள் விஜயகாந்த் அந்த அணியில் சேர்ந்த பிறகு ஊடகங்களுக்கு பணத்தை வாரியிறைத்து மக்கள் நலக் கூட்டணியின் மீது எதிர்மறை பிம்பத்தை மக்களிடம் கட்டியமைத்தார்கள். இந்த திட்டமிடப்பட்ட சூழ்ச்சி நிறைந்த, பணத்திற்காக மலத்தை விழுங்கிய ஊடகங்களின் மனசாட்சியற்ற போக்கு தான் மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு முதன்மையான காரணம் என நினைக்கிறேன்.
2. விஜயகாந்த் மற்றும் ஜி கே வாசனின் வியாபார அரசியல்
அரசியல் என்பதே வியாபாரமாகி விட்டது நாமெல்லாம் அறிந்த ஒன்று தான் என்றாலும் அந்த வியாபார பேரத்தை பகிரங்கமாக வெளிப்படையாக மேற்கொண்ட விஜயகாந்த் மற்றும் ஜி கே வாசன் ஆகியோரின் அருவருக்கத்தக்க போக்கு கட்சி கடந்து எரிச்சலை விதைத்தது. பிஜேபி, திமுக இரண்டு கூட்டணியிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள், அளவுக்கதிகமான சீட்டுகள், பண பேரம் என அனைத்தையும் கடைசி வரை முன் வைத்த விஜயகாந்த், எந்த பேரமும் படியாத கடைசி நொடியில் மக்கள் நலக் கூட்டணியை வந்தடைந்ததும் அங்கும் தான் தான் முதல்வர் வேட்பாளர் என அடம் பிடித்ததும் மக்கள் நலக் கூட்டணியை கேப்டன் கூட்டணி என பெயர் மாற்றம் செய்ததும் பிறகு கேப்டன் மக்கள் நலக் கூட்டணி என நீட்டி முழக்கியதும் கட்சிகளிடையே ஒருமித்த உணர்வு இல்லாததையும் விஜயகாந்த்தின் எல்லா இழுப்புக்கும் பணிந்து கேப்டன் நலக் கூட்டணியாக பரிணாமம் பெற்றதும் இந்த வீழ்ச்சிக்கு காரணம். எந்த கட்சியின் மீதும் ஆழ்ந்த பிடிப்பில்லாது இருந்த வாக்காளர்களிடம் இப்படியான செய்திகள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டதன் விளைவு அவர்கள் மக்கள் நலக் கூட்டணியின் மீதான நல்லெண்ணத்தை முற்றாக மாற்றிக் கொண்டார்கள்.
இப்படியே கடைசி வரை போயஸ் கார்டன் வாசலில் காத்துக் கிடந்து அவர்கள் காறி துப்பி வெளியே துரத்திய பிறகு மக்கள் நலக் கூட்டணியில் சரண்டரான ஜி கே வாசனின் கட்சியாலும் கூட்டணியின் மதிப்பு பல மடங்கு கீழ் நோக்கி சரிந்ததேயொழிய ஒரு சிறு லாபமும் ஏற்படவில்லை. ஒரே ஒரு மாற்றம் கூட்டணியின் பெயர் கேப்டன் மக்கள் நலக் கூட்டணி தமாகா என கொஞ்சம் விரிவடைந்தது மட்டும் தான்.
விஜயகாந்த் பிரேமலதா சுதீஷ் ஆகியோரின் பக்குவமற்ற பேச்சு
விஜயகாந்த் அங்கங்கே மேடையில் உளறிக் கொட்டினார் என்றால் பிரேமலதாவும் சுதீஷும் ஒருவித ஆணவப் போக்குடன் பேசியவைகளை இங்கு பட்டியலிட தொடங்கினால் அதற்கே தனிக்கட்டுரை எழுத வேண்டியிருக்கும். கேப்டன் ஒருவரே அகில உலகத்தையும் ஜீவிக்க பிறந்தவர் என்பதாகவும் அதீத நம்பிக்கையும் மக்களிடையே ரசிக்கப்படவில்லை.
வைகோவின் அந்தர்பல்டி அரசியல்
வைகோ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற நாள் முதலே தனது பொறுப்பற்ற பேச்சுகளால் கூட்டணியை தொடர்ந்து சின்னாபின்னமாக்கினார். ஒவ்வொரு திருவிழாவுக்கும் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவிப்பது தன் வழக்கம் என்பதை சொல்ல இந்த கறுப்பு துண்டு காவிக்கு கொஞ்சமும் வெட்கமே இருக்கவில்லை. சாதி ஓட்டுக்களை குறி வைத்து வைகோ ஆரம்பித்த சாதி பேச்சும் அதையே காரணமாக காட்டி வைகோ தேர்தலில் பின்வாங்கியதும்கூட்டணி மீதான நம்பகத்தன்மையை குறைத்தது. அதுவுமல்லாமல் இந்த தேர்தல் என்பதே தனக்கும் ஸ்டாலின் கருணாநிதிக்கும் இடையேயான பங்காளிச் சண்டை என்கிற ரீதியில் தொடர்ச்சியாக வெளிப்பட்ட வைகோவின் பேச்சுக்கள், சிலர் மிக தந்திரமாக முன் வைத்த அதிமுக வின் B டீம் என்பதையும் வைகோ ஜெயாவிடம் 1500 கோடி பேரத்திற்கு விலை போய் விட்டார் என்பதையும் உண்மையாக இருக்குமோ என மற்ற கட்சி சார்ந்தவர்களையும் கட்சி சார்பற்றவர்களையும் சேர்த்து மக்கள் நலக் கூட்டணியை சார்ந்த தொண்டர்களையும் கூட யோசிக்க வைத்து விட்டது.
பரந்த கட்டமைப்பு இல்லாத கட்சிகளின் கூட்டு
விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட்கள்,தமாகா, மதிமுக உட்பட்ட கூட்டணியின் எந்த கட்சிக்கும் தமிழகம் அளவில் பரந்துபட்ட கட்சி கட்டமைப்பு இல்லை. இக்கட்சிகள் தொடர்ந்து மிக குறைவான இடங்களிலேயே போட்டியிட்டு வந்ததன் விளைவோ என்னவோ, இக்கட்சிகள் தங்களுக்கு மிக சாதகமான தொகுதிகளை தவிர பிற பகுதிகளில் தங்கள் கட்சிக்கென ஒரு வலிமையான கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை, அப்படியான ஒன்று பிற்காலத்தில் தேவைப்படும் என்பதை கூட யோசித்து இந்த கட்சிகள் கடந்த காலங்களில் வேலை செய்திருப்பதாய்தெரியவில்லை. வட மாவட்டங்களில் வலிமையான வாக்கு வங்கியை உடையதாக கருதப்படுகிற விசிக கூட்டணி கட்சிகளுக்கு தங்களுக்கு சாதகமான பல தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டி இருந்தது. விசிகவிற்கு சாதகமான தொகுதிகளிலும் கூட அந்த கட்சி தோற்க காரணம் இதற்கு முந்தைய தொகுதிகளில் குறிப்பிட்டிருந்தது போல விஜயகாந்த், வைகோ, பிரேமலதா, சுதீஷ், ஊடகங்கள் ஆகியவை சம பங்கு ஆற்றினாலும் விசிகவை தோற்கடித்தே ஆக வேண்டும் என கட்சி கடந்து சாதி வெறியர்கள் இணைந்து செயல்பட்டதும் பட்டியலின மக்களிடையே பரவலான ஆதரவை பெறும் வகையில் கட்சியின் செயல்பாடு கடந்த காலங்களில் அமையாமல் போனதும் தான் காரணமென நினைக்கிறேன். எல்லா தொகுதிகளை போலவும் ஏன் மற்ற தொகுதிகளை விடவும் அதிகமாக, விசிகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் மற்ற சாதி கூட்டு கட்சிகள் பணத்தை வாரி இறைத்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முடிவா? தொடக்கமா?
இந்த தேர்தலின் தோல்வி பலவகையிலும் நம்மை சோர்வடையச் செய்திருக்கலாம். ஆனால் நாம் வீழ்ந்தே கிடப்பவர்கள் அல்ல. எத்தனையோ வீழ்ச்சிகளை, எதிர்ப்புகளை கடந்து வந்ததே நம் பாதை. யார் நம் கொள்கைகளோடு பாரிய அளவில் தொடர்ந்து இணைந்து செயல்பட கூடியவர்கள் என்பதை மீளாய்வு செய்து மக்கள் நலக் கூட்டணியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மக்கள் நலக் கூட்டணி தோற்றது என்பதில் மேற்கண்ட காரணிகள் அனைத்தையும் விட நம் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் அதிகார பலம் பெறுவதே சமத்துவ சமூகத்திற்கான முதல்படி என்னும் சாதி ஒழிப்பு உணர்வு நம்மிடம் இல்லாமல் போனதில் பெரும் வியப்பில்லை. வெளிப்பூச்சுக் கல்லறைகள் யார் என்பதை இந்த தேர்தல் நமக்கு வெளிக் காட்டியிருக்கிறது. ஆனால் ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிந்து கூட்டாட்சி மலர வேண்டும் என்ற உயரிய ஜனநாயக உணர்வு கூட உங்களிடம் இல்லாமல் போனது ஏன்? உங்கள் சாதி கரையான் மூளையை முழுதுமாக அரித்து தின்றுவிட்டது தான் காரணமா? நாம் ஆளும் வர்க்கமாக மாற வேண்டும் என்பதல்ல, இங்கு அடிமை வர்க்கம் என யாரும் தொடரக் கூடாது என்பதான லட்சியம் உங்களுக்கு கசந்துபோக காரணம் என்ன? இப்போதும் சிந்தியாமல் ஆட்டு மந்தைகளாய் மக்கள் நலக் கூட்டணியை விமர்சிக்கிறோம் என்கிற பெயரில் கேலியோடு நம்மால் இந்த வீழ்ச்சியை கடக்க முடிகிறதெனில் யார் பரிதாபத்துக்குரியவர்கள்?
என் இனிய தோழமைகளே! நமது போராட்டம் வெற்றி தோல்விகளை சார்ந்தது மட்டுமே அல்ல, அது நம் இருத்தலுக்கானது, வாழ்விற்கானது. என்று நம் போராட்ட உணர்வை கைவிடுகிறோமோ அப்போதே அந்த கணமே மண்மூடி புதைக்கப்பட்டு விடுவோம். சிலருக்கு வாழ்க்கையே போராட்டம், நமக்கு போராட்டம் தான் வாழ்க்கையே. குறைகள் களைந்து தொடர்ந்து பயணிப்போம்!



No comments:
Post a Comment