Tuesday, May 31, 2016

தமிழ் தேசியம்

தமிழ் தேசியம்

இலக்கண நூல்களும் அறிவுஜீவிகளும் தேசியத்திற்கு கொடுத்துள்ள வரையறைகள் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாது அது நடைமுறையில் எவ்வாறெல்லாம் பிரயோகிக்கப்படுகிறது என்பதையே முதன்மையாக கொண்டுப் பார்த்தால்,
தேசியம் என்படுவதை " எந்த ஒரு பொது அடையாளத்தின் பொருட்டு ஒரு மக்கள்திரள் பெருமையடைகிறதோ அல்லது எது ஒன்றின் பெயரால் மக்களை ஒரு அரசியல் சக்தியாக திரட்ட முடிகின்றதோ அல்லது எது ஒன்றினால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ அல்லது அவமதிக்கப்படுகிறதோ, அந்த மக்கள் திரளின் கூட்டு அடையாளமே தேசியம் " எனலாம்.


“ஒரு தேசிய இனம்
தேசியத்தை உருவாக்குவதில்லை.
மாறாக, ஒரு தேசியமே தேசிய
இனத்தை உருவாக்குகின்றது.”

சரித்திரவியலாளர் Eric Hobsbawm
பெரும்பாலும் தேசம், தேசியம், இனம், தேசிய இனம் இவைகளெல்லாம் ஒன்றையே குறிக்கும் சொற்களாகத்தான் பலராலும் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. தேசம் என்பதும் தேசியம் என்பதும் முற்றிலும் வேறு.
உதாரணமாக இந்திய தேசத்திற்குள்ளேயே பலவகையான தேசியங்கள் உள்ளன. இந்திய தேசியம், தமிழ் தேசியம், தலித் தேசியம், சிங்கள தேசியம் போன்ற வார்த்தைகள் நாம் அறிந்த சில.
இனம் என்பது ஒரு குழு அல்லது வகுப்பைச் சார்ந்தவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது. அது பழங்காலத்தில் பெரும்பாலும் மதம், சாதி ஆகியவற்றையே சார்ந்திருந்தது.
இன்னும் சொல்லப் போனால் சில நூறு வருடங்களுக்கு முன் தேசியம் என்ற வார்த்தையே பொதுவான பயன்பாட்டில் இல்லை. சர்வாதிகார அரசுகளுக்கெதிராக மக்கள் பெரும் திரளாக இணைந்து போராட ஆரம்பித்ததையே தேசியம் என்பதன் தொடக்கம் எனலாம்.

தேசியம் என்ற சொல்லைப் போல் குழப்பம்தரும் வரையறைகள் கொண்ட சொல்லை தமிழ்மக்கள் கண்டதே இல்லையோ என்று தோன்றுகிறது. அந்தளவிற்கு குழப்பமிகு வரையறைகள் இங்கு நிறையவே உண்டு. கம்யூனிசம் எவ்வாறு 'அறிவுஜீவிகளால்' குழப்படிக்கப்பட்டதோ அதே போல தான் தேசியமும்.
மக்கள் ஒன்றாக இணைந்து தேசியத்தை அமைப்பதில்லை. தேசிய உணர்வே மக்களை இணைக்கிறது. அதாவது தாம் எல்லாம் ஒரு குழு என்ற அடிப்படையில் மக்கள் ஒருங்கிணைகிறார்கள்.
இந்து தேசியம் - நாம் எல்லாரும் இந்துக்கள்
இந்திய தேசியம் - நாம் எல்லாரும் இந்தியர்கள்
தமிழ் தேசியம் - நாம் எல்லாரும் தமிழர்கள்
தலித் தேசியம் - நாம் எல்லாரும் ஒடுக்கப்பட்டவர்கள்.
இப்படி ஒத்த சிந்தனைக்குள் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளை ஒருங்கிணைப்பதே தேசியம் எனப்படுகிறது.

தேசியம் என்பது கீழ்க்கண்ட கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென பல்வேறு ஆய்வியல்நோக்கர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
* பொது மொழி
* பொது பண்பாடு
* பொது கலாச்சாரம்
* சேர்ந்தாற்போன்ற நில அமைப்பு
* பொது உளவியல் கட்டமைப்பு
இந்த அம்சங்களின் வழியாகவே ஒரு தேசியத்தை கட்டமைக்க முடியும் என்று கூறப்படுகிறது. நாமும் இந்த அம்சங்களை பொருத்தியே இந்து தேசியத்தையும் தமிழ் தேசியத்தையும் அலசிப் பார்க்கலாம்.
அதற்கு முன் ஒன்று, தேசியம் என்ற கருத்தாக்கம் யாருக்கு பயனளிக்க கூடியதாக இருக்கிறது ? தேசியம் என்ற கட்டமைப்பு ஆளும் வர்க்கத்திற்கு துணைபோவதாகவே இருக்கிறது.
மக்கள் எல்லோரையும் தேசியம் என்ற புள்ளியில் இணைத்து, அவர்கள் வேறு எந்த பிரச்சினையிலும் கவனம் செலுத்திவிடாதபடிக்கு மக்களை மழுங்கடிக்கவே தேசியம் என்ற ஆயுதம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்து மத உணர்வை இந்திய தேசியமாகவும் சாதி வகுப்புணர்வை தமிழ் தேசியமாகவும் இவர்கள் உருவகப்படுத்த முடிவதற்கான காரணம், தேசியம் என்பது எப்போதும் உணர்வுபூர்வமான , உணர்ச்சி அரசியலாகவே இருப்பதே. அதை அறிவுபூர்வமாக அணுகுவது குறித்து இங்கு யாருக்கும் சிரத்தையேயில்லை.

தமிழ்தேசியத்திற்கான தெளிவுப்பெற்ற வரையறைகள் எதுவும் காணப்படவில்லை அல்லது தேசியம் குறித்த பொதுவான வரையறைகளுடன் தமிழ்தேசியம் ஒத்துப்போகவில்லை என கருத வேண்டி இருக்கிறது.
தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழ்தேசியம் அமைப்பதே இதன் அடித்தளமாக இருக்கிறது. இதன்படி பார்க்கினும் குழப்பமே மிஞ்சுகிறது. ஏனெனில் தேசியம் என்ற கருத்துநிலையிலிருந்தே தேசிய இனம் உருவாக முடியும். ஆனால் மக்களை ஒன்றிணைத்து பின் தேசியம் அமைப்பதான தலைகீழ் வேலையை செய்கிறார்கள்.
தேசியம் குறித்த வரையறையில் முதலானவதாக வருவது பொது மொழி. இதன்படி பார்த்தால் தமிழ்மொழி பேசும் அனைவரும் தமிழ்தேசியத்திற்குள் வர வேண்டும். ஆனால் தமிழ் தேசியத்தின் கருத்துருவாக்கம் ஈழம் மற்றும் தமிழகப் பகுதியோடு சுருங்கிவிடுகிறது. மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் குறித்த எந்த பிரக்ஞையும் தமிழ்தேசியவாதிகளிடம் இருக்கவில்லை.

தேசியம் குறித்த வரையறையில் அடுத்து வருவது பொது பண்பாடு மற்றும் பொது கலாச்சாரம். தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் பொதுவான பண்பாடோ, கலாச்சாரமோ கொண்டவர்கள் அல்ல. தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் மக்கள் பல குழுக்களாக, வகுப்புகளாக பிரிந்தே இருக்கிறார்கள்.
மக்களின் பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது அவர்களின் சாதி, வட்டாரம் மற்றும் மதத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பல்வேறு சாதியினரும் மதத்தினரும் வட்டாரக்குழுவினரும் வசிக்கும் சூழலில் ஒரே பண்பாடு, கலாச்சாரம் என்பதே சாத்தியமற்றதாகிவிடுகிறது.
ஒவ்வொரு சாதிக்குழுவும் தனக்கென ஒரு கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது. அந்த சாதி குழுக்களிலும் வட்டாரங்களுக்கேற்ப இந்த கலாச்சாரம் வேறுபடுகிறது. ஆக தமிழ்தேசியத்திற்கான பொது பண்பாடு மற்றும் கலாச்சாரமாக அதாவது தமிழர் பண்பாடு மற்றும் தமிர் கலாச்சாரமென தமிழ்தேசியவாதிகள் எதை முன்னிறுத்த முடியும் என்பது கேள்வி.
ஈழத்தையும் தமிழ்தேசியத்திற்குள் உள்ளடக்கி பார்த்தால் இந்த பொது பண்பாடு மற்றும் பொது கலாச்சாரமென்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினரின், வகுப்பினரின், மதத்தினரின் , வட்டார மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை ஒட்டு மொத்த மக்களுக்குமான பண்பாடு அல்லது கலாச்சாரமாக உருவகப்படுத்துவதையே தமிழ்தேசிய கருத்துருவாக்கம் செய்து வருகிறது.

தேசியம் என்பதற்கான அடுத்த வரையறை சேர்ந்தாற் போன்ற நிலப்பரப்பு. தமிழ் தேசியம் என்பது தமிழகம் மற்றும் ஈழம் இரண்டையும் உள்ளடக்கியது என்கையில் சேர்ந்தாற்போன்ற நிலப்பரப்பு எவ்வகையில் சாத்தியமாகும்? ஈழம் மலர்ந்தால் இங்குள்ள தமிழர்களெல்லாம் அங்கு அழைத்துக்கொள்ளப்படுவார்களா என்ன? அல்லது இங்கு தான் தமிழ்தேசியம் அமைத்த மொத்த தமிழர்களையும் இட்டுக்கொள்வார்களா?
கடைசியான ஒன்று பொதுவான பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினால் கட்டமைக்கப்பட்ட பொது உளவியல். இங்குபொதுவான பண்பாடு மற்றும் கலாச்சாரமே இல்லை எனும் போது பொது உளவியல் மட்டும் எப்படி சாத்தியமாகும்? ஒவ்வொரு மக்கள் குழுவும் வேறுபட்ட கலாச்சார மற்றும் பொருளாதார பின்னனியைக் கொண்டவர்கள். வேறு வேறான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள்.
தமிழகத்தில் இருப்பவர்களும் ஈழத்தில் இருப்பவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றல்ல. தமிழகத்திலேயே ஆதிக்க சாதியினரும் ஒடுக்கப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முற்றிலும் வேறானவை. அவர்களின் சூழலை பொருத்தே உளவியல் கட்டமைக்கப்படுமென்பதால் பொது உளவியல் என்பதும் பேச்சளவிலான கருத்துருதான் என்பது புலனாகிறது.

இந்திய தேசியம் எனப்படுவதன் ஒரே சாதகமான அம்சம் சேர்ந்தாற்போன்ற நிலப்பரப்பு மட்டுமே. ஆனால் அந்த சேர்ந்தாற்போன்ற நிலப்பரப்பு மட்டுமே ஒரு தேசியத்தை கட்டமைப்பதற்கு போதுமானதாக இல்லை. ஏனென்றால் இந்திய தேசம் என்பதே பல இனங்களை, குழுக்களை, பன்மொழி பேசுபவர்களை உள்ளடக்கிய ஒன்று. இந்திய தேசம் என்கிற கட்டமைப்பு ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷாருக்கு முன் பல அரசர்கள் படையெடுத்து வென்ற பகுதிகளையும் இணைத்து அகண்ட பாரதம் என்ற இந்து தேசியத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்பினரின் கனவு.
இந்தியா என்பது பல்வேறு நாடுகளின் அல்லது தேசிய இனங்களின் ஒரு கூட்டமைப்பு. நாளடைவில் இந்த தனித்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் முன்பே உள்ளபடி தமக்கான சுத5ஃதிர அரசை நிறுவிக்கொள்வதற்கான சாத்தியங்களே அதிகம் உண்டு.
மேலும் பண்பாடு , கலாச்சாரம், உளவியல் , பொருளாதாரப் பின்னனி போன்ற எந்த பொதுமையான அம்சங்களும் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இது குறித்து " இந்து தேசியமும் இந்துத்துவ காட்டுமிராண்டிகளும் " என்ற பத்தியில் ஏற்கனவே விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.

தேசியம் எனப்படுவது எப்போது ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமானதாக இருக்கிறது. சகோ உமா தேவி அவர்கள் ஒரு விவாதத்தில் பொதுப் பண்பாடு, பொது கலாச்சாரம் என்பது கார்ப்பரேட்டுகள் பின்பற்றுவது தானே என்று கேட்டார். ஆளும் வர்க்கத்தின் இணைப் பிரிவான முதலாளித்துவமும் இந்த உட்கருத்துக்களை தனக்குள் வரிந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.
தேசியம் என்ற கருத்துரு மக்களை எப்போதும் உணர்ச்சி நிலையிலேயே வைத்திருக்க உதவுகிறது. உதாரணமாக நாட்டில் ஒரு முக்கியமான பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும். அந்த நேரத்தில்காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் என்ற செய்தி வந்தால் மற்றனைத்தும் தானாக பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும்.
தேசியம் என்பது எல்லோரும் ஒன்று, சமமானவர்கள் என்ற மாயையான தோற்றத்தை மனதில் விதைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் இந்தியர்கள் என்ற கோஷத்தின் முலம் பல்வேறு தனித்த தேசிய இனங்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டு மத்திய ஆளும் வர்க்கத்தின் கீழ் மக்களை தொடர்ந்து இயங்க வைக்கிறது. ஆளும் வர்க்கத்தை நோக்கி விரல் நீட்டும் எவரும் தேசத்துக்கே துரோகிகளாக முத்திரை குத்தப்படுவார்கள்.
மக்களின் கவனத்தை நாட்டின் பிரச்சனைகளிலிருந்து சிதறடித்து ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாக மக்கள் திரள் சாய்ந்திருக்க செய்வதற்கான ஒரு ஆயுதமாகவே தேசியம் பேணப்பட்டு வருகிறது.


தமிழ் தேசியம் என்பதே சிக்கலான, வரையறைகளில் தெளிவற்ற ஒரு கருத்துருவமாக காட்சியளிக்கிறது. தமிழர்களுக்கான தனி நாடு என்பதே தமிழ் தேசியத்தின் லட்சியமானால் அந்த நாட்டை எங்கு அமைப்பார்கள் இலங்கையிலா அல்லது தமிழகத்திலா? இலங்கையில் மலர்வதான ஈழ தேசியம் இங்குள்ள தமிழர்களின் இன்னல்களுக்கு எவ்வகையில் தீர்வளிக்க கூடியதாக இருக்கும்? இந்திய இறையாண்மையை மதிக்கிறோம் என முழக்கமிடும் சீமானோ, பழநெடுமாறனோ தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தால் இங்கே தமிழ் தேசியம் மலர்ந்துவிட்டதாக கொள்ள முடியுமா? தமிழ் தேசியம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டும்தானா?
அப்படியெனில் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பது தவறா? தமிழ் தேசியம் என்பது தேவையற்ற ஒன்றா? தேவையெனில் தமிழ் தேசியத்தை எப்படி சாத்தியமாக்குவது? தமிழ் தேசியத்தின்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தான் என்ன?

தமிழ் தேசியம் என்றல்ல, எந்த ஒரு தேசியமென்றாலும் அது வெற்றியடைவதற்கு கீழ்கண்ட நான்கு அம்சங்கள் தேவையாக இருக்கின்றன.
* தேசியத்திற்கான தேவை
* தேசியத்திற்கான கொள்கை
* தேசியத்திற்கான தலைமை
* வெகுமக்கள் போராட்டம்
தேசியத்திற்கான தேவை :
இந்தியா பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு. ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான சுதந்திர அரசை கட்டியெழுப்புவதற்கான போராட்டங்களென்பது எவ்வகையிலும் தவறானதல்ல. ஆனால் தமிழ்தேசியவாதிகளின் நடைமுறைச் செயல்பாடுகள் மற்ற தேசிய இனங்களின் மீது காழ்ப்புணர்வை வளர்த்தெடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.
மற்ற தேசிய இனங்களை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து, மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் தங்கள் அரசியல் லாபத்தை அறுவடை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்று சுதந்திர வேட்கையுடன் முழக்கமிடுபவர்கள், அதே தமிழினத்தின் பெரும்பகுதி பார்ப்பனீயத்தினால் சீரழிந்து அடிமையில் உழல்வதை பற்று சிறிதும் சிந்திப்பதேஇல்லை. மாறாக என்ன கூப்பாடு போட்டாலும் கடைசியில் இவர்கள் சரணாகதி அடைவது பார்ப்பனீயமாகத்தான் இருக்கிறது. தங்கள் சுயலாப அதிகார அரசியலுக்காக மக்களின் பெரும்பகுதி அடிமைகளாக தொடர்வதே தங்களுக்கு பாதுகாப்பானதென தமிழ்தேசிய ஆளுமைகள் நினைப்பதாலேயே, பார்ப்பனர்களும் தமிழ்தேசியத்தை தங்களுக்கான பாதுகாப்பு கவசமாகவே எண்ணுகிறார்கள்.

தேசியத்திற்கான கொள்கை :
தமிழ் தேசியவாதிகளின் கொள்கைதான் என்ன? தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்பதுதான் தமிழ் தேசியத்தின் சுருக்கமான வடிவமா? தமிழ்தேசியம் குறித்த தெளிவான வரையறைகள் இருக்கிறதா?
திராவிடம் என்பது சரி, தவறு என்ற விவாதத்திற்குள் செல்லாமல் சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திராவிடம் என்றால் கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, பெண்ணுரிமை, சுய மரியாதை திருமணங்கள் , வர்க்கபேதமற்ற சமூகம் என பல கொள்கை அம்சங்கள் இருக்கின்றன. ஆக இப்படியான, இதையொத்த அம்சங்கள் தமிழ்தேசியத்தில் ஏதுமிருக்கிறதா?
ஒரு திராவிடக்கொள்கையாளன் எந்த யோசனையுமின்றி நாத்திகனாக கற்பனை செய்யப்படுவதுபோல், ஒரு தமிழ்தேசியவாதி தீவிர சாதியாளனாகவே பார்க்கப்படுகிறானே, ஏன்? தமிழ், தமிழர் நலன், தமிழர் ஆட்சி என்பதெல்லாம் சரிதான். ஆனால் இந்த கோபுரங்களை எந்த அடித்தளத்தின் மீது கட்டுவதாக உத்தேசம்? அடித்தளம் ஏதுமற்று கட்டப்படும் தமிழ்தேசியம் ஆகாயக்கோட்டையாகத்தான் நீடிக்க முடியும்.
மக்களுக்கான சுதந்திர அரசை கட்டியெழுப்புவதாக முஷ்டி உயர்த்துபவர்கள் , அவர்களின் சொல்லொணா துயர்களுக்கு தீர்வாக எதை முன்வைக்கிறார்கள்? தமிழனை தமிழன் ஆள்வதால் மட்டுமே துயர்களெல்லாம் இல்லையென்றாகும் மாயம் நிகழ்ந்துவிடுமா? தமிழனை தமிழனே, செந்தமிழ் அரசர்களே, முத்தமிழ் காத்த மூவேந்தர்களே ஆண்ட காலம் தொட்டு இன்று வரையில் சாதி, மத வலையில் சிக்கி , தங்கள் மனித மாண்பையே பறிகொடுத்து நிற்கும் பரிதாப மக்களுக்கு தமிழ் தேசியம் என்ன சொல்ல விழைகிறது? சாதியை மறந்து தமிழராய் ஒன்றுகூடுங்கள் என்பது தானா? அதாவது சாதியை ஒழிப்பதெல்லாம் அதிகப் பிரசங்கிதனம், அதை மறந்து விடுங்கள், அதாவது அதை உங்கள் கக்கத்தில் மறைத்துக் கொள்ளுங்கள், அது போதும்.

தேசியத்திற்கான தலைமை :
தமிழனிடம் நீயும் மனிதன், அவனும் மனிதன், ஏனப்பா பாகுபாடு என சாதி, மத கொடூரங்களை சொல்லி அறிவூட்டுவதை விட, இமயமலைவரை வென்றவனே, இன்று உனக்கென ஒரு நாடில்லையே என்று பேசி உணர்ச்சியூட்டுவது மிக எளிது.
தேசியம் என்பது பேசுப்பொருளாகின் அதற்கான தலைமை என்பது மிக அவசியம். தமிழ்தேசிய தந்தை என்று இவர்கள் சுட்டிக்காட்டுவதோ ஈழ மண்ணில் போர்க்களம் கண்ட பிரபாகரன் அவர்களை. இதில் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரன் அவர்கள் தனது வாழ்நாளில் ஓரிடத்திலும் கூட தமிழ் தேசியம் என்ற வார்த்தையை உச்சரித்ததில்லை. தமிழ் தேசியம் அமைப்பதென்பது அவரின் கனவாகவும் இல்லை.
அவரின் இலக்கும் வாழ்வும் சிங்கள பேரினவாதிகளிடமிருந்து ஈழ மக்களை மீட்டு ஒரு சுதந்திர ஈழ அரசை நிறுவுவதென்பது மட்டும் தான். உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைக்கும்படியான தமிழ்தேசியம் அமைப்போம் என பிரபாகரன் அவர்கள் எப்போதேனும் முழங்கினாரென எடுத்துக்காட்ட இயலுமா?
ஆக, பிரபாகரனே நினைத்துப் பார்த்திராத தமிழ்தேசியத்தை தமிழ்தேசியவாதிகள் வலிய அவர்மேல் திணிக்கிறார்கள். தொலைக்காட்சி தொடர்களின் சோகங்களுக்கே உச் கொட்டி உள்ளம் நெகிழ்பவர்களாயிற்றே தமிழர்கள், கொத்து கொத்தாய் ஈழத்தில் தமிழ் மக்கள் மடிவதை பற்றி பேசினால் மறுப்பா வரப் போகிறது? ஈழத்தின் இன்னல்களையெல்லாம், தியாகங்களையெல்லாம் தங்களின் சுயலாப அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதில் தேர்ந்தவர்கள் தமிழ்தேசியவாதிகள் என்பதற்கான சமீபகால உதாரணங்கள்தான் பாலச்சந்திரன், இசைப்பிரியா, முத்துக்குமார், செங்கொடி போன்றவர்களின் மரணக்கறைகளை தங்கள் கட்சி கொடிகளில் பூசி ஆதாயம் பார்த்தது. ஆக, அதிகார சுய நலனுக்காக பிரபாகரனை தங்களுக்கான அம்பாசிடராக இவர்கள் பயன்படுத்துகிறார்களேயொழிய., தமிழ்தேசியத்திற்கென தெளிவான தலைமை என எதுவுமில்லை.

வெகு மக்கள் போராட்டம் :
எந்த ஒரு போராட்டமும் வெற்றியடைவதற்கு வெகு மக்களின் பங்களிப்பு மிக அவசியம். மக்கள் அதன் அத்தியாவசியத்தை உணர்ந்து வீதி இறங்கி போராடினால் ஒழிய எல்லா முழக்கங்களும் ஒருநாள் கூச்சலாகவே முடிந்து போகும். ஆனால் தமிழ்தேசியவாதிகளும் சரி, இங்குள்ள ஊடகங்களும் சரி, மக்களிடம் தமிழ் தேசியக் கொள்கைகள் குறித்த தெளிவான புரிதலை உண்டாக்கவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்தேசியம் என்ற கருத்துருவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தோல்வியையே கண்டிருக்கிறார்கள்.
எல்லோருமே பார்ப்பனர்களல்ல, தமிழ் அந்தணர்களையும் பார்ப்பனர்களாக திராவிடம் ஒடுக்க நினைக்கிறது என குற்றச்சாட்டு வாசிப்பவர்கள் தங்களின் கொள்கை பற்றி கேட்கப்படும் போதெல்லாம் தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்பதை தவிர வேறு பேச மறுக்கிறார்கள்.
தங்களிடம் ஒட்டுச்செடியாக வளரும் பார்ப்பனியத்திற்கு ஆள் பிடிக்கும் விதமாக சிறுதெய்வ வழிபாட்டை முன்னிறுத்துகிறார்கள் தமிழ்தேசியவாதிகள். சுடலைமாடனும் அய்யனாரும் ஒண்டிவீரனும் உங்களின், எங்களின் பாட்டன்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த சிறு தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகளும் சிவன் மற்றும் பெருமாளின் வழிபாட்டு முறைகளிலும் வேறுபாடுகள் ஏன்? சிவன், பெருமாளைக் கும்பிடுபவனும் மதுரை வீரன், முனியாண்டியைக் கும்பிடுபவனும் ஒரே இந்து மதம்தான் என்றால் பிறகு ஏன் இந்த வேறுபாடு?
மக்களிடம் தொடர்ச்சியான குழப்பத்தை விதைப்பதைவிட தமிழ்தேசியவாதிகள் ஒன்றும் செய்ததில்லை என்பதே கடந்த கால வரலாறு. தமிழ், தமிழர் நலன் என்று முழங்குபவர்கள் , தமிழுக்கும் தமிழனுக்கும் ஆபத்து நேர்ந்தபோதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

* மொழித்துவ, இனத்துவ, வட்டார உணர்வை தூண்டிவிடுகிறது.
- தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டுமல்ல, இன்னும் எண்ணற்ற தேசிய இனங்கள் இந்தியாவில் உண்டு. அவைகளோடு ஒத்த , சுமூக நல்லுறவை பேணுவதற்கு பதில், மக்களிடையே காழ்ப்புணர்வை தமிழ் தேசியம் வளர்க்கிறது. வட இந்திய தொழிலாளர்களை விரட்டியடியுங்கள் எனும் தமிழ் பாசிசவாதிகளின் குரலை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கக்கூடும். அதுவல்லாமல் கன்னட, மலையாள, தெலுங்கு மொழி பேசும் மக்களை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிரிகளாக சித்தரிக்கவும் தமிழ் தேசியம் தவறுவதில்லை.
* பொருளாதார சிக்கல்கள் குறித்த தெளிவின்மை
- ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகள் கிடைக்கப்பெறாத, வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் பெருங்கூட்டத்துக்கான தீர்வு என்னவென்பது பற்றி தமிழ்தேசியம் சிந்திக்கவேயில்லை. சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் இடதுசாரிப் போக்கிலிருந்து வெகுதூரம் விலகி, பார்ப்பனீயத்தை, முதலாளியத்தை ஆதரிக்கும் வலதுசாரிப் போக்கையே தமிழ்தேசியம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

* சாதி பாகுபாடு குறித்த மழுப்பலான நிலைப்பாடு
- தமிழனை தமிழனே ஆளவேண்டும், வேற்று மாநிலத்தவர்களின் அடிமைகளாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் தமிழ்தேசியவாதிகள், தமிழ் மக்களுக்குள்ளேயே சாதியவாதம் தலைதூக்கி பெரும்பான்மையினர் பிறப்பின் வழியே ஒரு பிரிவினருக்கு கீழ்ப்பட்டவர்கள் என்ற போக்கினை குறித்து சிறு சிணுங்கலையும் அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. சாதியை மறந்து ஒன்றுபடுங்கள் என்பது மட்டுமே தமிழ்தேசியத்தின் நிலைப்பாடு. அதாவது அடிப்பவனிடம் சாதி வெறியை மறந்து ஒன்றுபடுங்கள் என்பதற்கு மாறாக, அடிவாங்குபவனிடம் சாதியை மறக்கச் சொல்கிற கயமைத்தனத்தையே தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்து செய்கிறார்கள். சாதி ஒழிப்பிற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் எதையும் தமிழ்தேசியம் கொண்டிருக்கவில்லை. சாதியை தமிழனின் கலாச்சாரமாக சித்தரித்து, சாதி ஒழிப்பை தனக்கு விரோதமான ஒன்றாகவே கருதுகிறது தமிழ்தேசியம்.
* மேட்டுக்குடிகளின் கருத்தியல்
- சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் குறித்த எந்த தீர்வையும் முன் வைக்காமல் , மொழி உயர்வை மட்டுமே முதன்மைப்படுத்தி மற்றெல்லாவற்றையும் மழுங்கடிக்கிறது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி எங்கள் தமிழ்மொழி என்றும் தமிழர்களே உலகின் ஆதிகால பூர்வக்குடிகள் என்றும் பழம்பெருமைகளை வாய்வலிக்க பேசுகிறவர்கள், அந்த தமிழ்குடியின் சமத்துவ வாழ்விற்கான சித்தாந்தம் எதையும் தனக்குள் கொண்டிருப்பதாக தெரியவில்லை. இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் , திருவாசகம் இவைகளின் இலக்கிய சுவையை எண்ணி மெச்சுபவர்கள் அதன் கருத்தியலை மறந்தும் விமர்சனப்பார்வையோடு அணுகுவதில்லை. ஒருவேளை கஞ்சிக்கே வழியற்ற அடித்தட்டு மக்களிடம் இலக்கிய பெருமைகளை அள்ளி வீசி அழகியலை மட்டுமே பேசுகிற மேட்டுக்குடி கருத்தியலாக இருக்கிறது தமிழ்தேசியம். சமஸ்கிருதம் கலந்த தமிழில் எழுதிய பாரதியை தமிழ் மகாக் கவிஞன் என கொண்டாடுபவர்கள், தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தங்களை கொண்டுவந்து பாமரமக்களையும் சிந்திக்க தூண்டும்படி எழுதிய பெரியாரை தமிழர்களின் விரோதியாக அடையாளப்படுத்துகிறார்கள். இவர்களின் தமிழ் பற்றும் சாதி முலாம் பூசி மினுக்கும் போலியான ஒன்றுதான் என்பதை இதன்வழி அறியலாம்.

* பாசிச தமிழ் தேசியம்
தமிழர் அல்லது தமிழ்நாட்டு மக்கள் என்பதற்கான எத்தகைய தெளிவான வரையறையையும் தமிழ்தேசியம் கொண்டிருக்கவில்லை. சாதியை மறந்து தமிழராக ஒன்றுபடுங்கள் என்பது மிகப் பெரிய பித்தலாட்டமேயன்றி வேறில்லை.
ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும் தமிழன் என்று கொள்ளும்போது, ஒடுக்கப்படும் மக்களுக்காக சிறு துரும்பளவும் செயலாற்றாத, ஒடுக்கும் சக்திகளின் பக்கம் நிற்கிற, அவர்களின் சாதி கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரமாக கொண்டாடுகிற பாசிசவாதிகளின் கூடாரமாகவே இருக்கிறது தமிழ் தேசியம்.
சாதிய மோதல்கள் நிகழும் போதெல்லாம் அவற்றை லாவகமாக திராவிடக் கட்சிகளின் பக்கம் மடைமாற்றி விடுவதை தவிர தமிழ்தேசியவாதிகள் செய்ததொன்றுமில்லை. பெயரளவிற்கேனும் அறிக்கை வெளியிட்டு சாதியவாதிகளின் அராஜகத்தை கண்டிப்பதை விட்டு, தமிழராக ஒன்றுப்படாத வரை இத்தகைய சாதி மோதல்கள் தொடரத்தான் செய்யும் என சாதி வெறியர்களுக்கு தமிழ்தேசியம் வக்காலத்து வாங்குகிறது.
கடைநிலை மக்களின் கருத்துநிலையாக அல்லாமல் ஆண்டப் பரம்பரைகளின், ஆதிக்க சாதி வெறியர்களின் ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்வதிலேயே தமிழ்தேசியம் முனைப்பு காட்டுகிறது.

* முரண்பாடுகளின் தொகுப்பு
இந்தியா என்பது பல தேசிய இனங்களின் தொகுப்பு. மொழிவாரியாக பார்த்தாலும் தமிழர்களைப் போலவே எண்ணற்ற தேசிய இனங்கள் காணப்படுகின்றன. ஆனால் தேசப்பற்று என்ற தேனைத் தடவி இந்திய தேசியம் என்ற ஒற்றை தேசியத்திற்குள் மக்களை சிறைப்படுத்தும் வேலையையே மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் தொடர்ந்து செய்து வருகின்றன.
தனது இனத்தின் தனித்த தேசியத்தை பாதுகாக்க அல்லது மீட்டெடுக்க விரும்பும் எந்த மக்கள் குழுவும் எதிர்க்க வேண்டியது இந்திய தேசியம் தான். தன்னைப் போலவே தனது இனத்தின் தனித்த தேசியத்துக்காக போராடும் பிற இனக் குழுக்களுடன் இணைந்து இந்திய தேசிப் என்ற மாயையை, அதன் ஆதிக்கத்தை தகர்த்தெறிவதையே தமிழ்தேசியம் தனது முதன்மை இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காண்பது என்ன?
வல்லாதிக்க தேசியமான இந்திய தேசியத்திற்கு வால் பிடிப்பதையே தங்கள் கொள்கையாக வெளிப்படுத்துகிறார்கள் தமிழ்தேசியவாதிகள். இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு தமிழ் தேசியம் அமைப்போம் என்பதைவிடவும் உளறல் இருக்க முடியுமா? அது எப்படி என்பதை தமிழ் தேசியவாதிகள் விளக்குவார்களா? சீமானோ, வைகோவோ, பழ நெடுமாறனோ, நடராசனோ தமிழக முதல்வராகிவிட்டாலே தமிழ்தேசியக் கனவை அடைந்துவிட்டதாக மக்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாட வேண்டுமா? இதுதானா இவர்கள் நரம்பு புடைக்க கொக்கரிக்கும் தமிழ்தேசியம்?
இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு இந்திய தேசியத்திற்கு பல்லக்கு சுமப்பர்கள், தங்களின் தோழமை தேசிய இனங்கள் குறித்த காழ்ப்புணர்வை மக்கள் மனதில் விதைத்து அரசியல் அறுவடை செய்வதில் மட்டுமே முனைப்பாயிருக்கிறார்கள். எதிர்க்க வேண்டியதன் முன் மண்டியிட்டு வணங்கிவிட்டு கைகொடுக்க வேண்டியவர்களுடன் 'கத்தி'ச்சண்டை செய்துவருகிறார்கள்.
திராவிட எதிர்ப்பை, பெரியார் எதிர்ப்பையே முழுமுதல் வேலையாக செய்கிற தமிழ் தேசியவாதிகள், திராவிடக்கொள்கையாளர்களெல்லாம் துரோகிகளென தீர்மானமாக கருதி, தாங்கள் அமைக்கப்போகும் தமிழ்தேசிய அரசின் காலத்தில் கழுவேற்றி கொன்றுவிடுவார்களோ என்று அச்சப்படுமளவுக்கு தனது சக தமிழர்களையே எதிரிகளாக பாவிப்பவர்கள், சக இனக் குழுக்களுடன் இணைந்து இந்திய தேசியத்தை எதிர்த்து குரல்கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் நமது அதீத முட்டாள்தனம் தான்.

- LEO JOSEPH D
- dleokommedu@gmail.com

Monday, May 30, 2016

வைகோ திராவிட இயக்க தலைவரா?

வைகோ திராவிட இயக்க தலைவரா?

வைகோ???
ரஜினியை நடுநிலைவாதி என்பதும் கமலை நாத்திகவாதி என்பதும் வைகோவை திராவிடக் கட்சி தலைவர் என்பதும் வேறு வேறல்ல. எல்லாமும் அப்பழுக்கற்ற கலப்படமற்ற முகமூடிகள் தான்.
திமுக வின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து தனிகட்சி கண்ட வைகோவின் ஆரம்பம் என்னவோ ஆஹா போட வைப்பது உண்மைதான். ஆனால் அதன்பின் அவர் எடுத்த யூ டர்ன்களெல்லாம் ஊட்டி மலை ரோட்டில் கூட இல்லாத அதிசிய வகைகள் தான்.


பெரியார் மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து தனி கட்சி கண்ட அண்ணா, திக வின் கடவுள் மறுப்பு கொள்கையை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பார்ப்பனர் உட்பட யார் வேண்டுமானாலும் வந்து ஏறிக்கொள்கிற பொதுவண்டியாக மாற்றினார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகமாக கண்ட முன்னேற்றம் இது தான்.
கணக்கு வழக்கு ஒழுங்காக காண்பிக்க வில்லை என அங்கிருந்து தனி வண்டி பூட்டிய எம்ஜிஆர் பட்டவர்த்தனமான பக்திரசம் பொங்கும் கட்சியாகவே அதிமுகவை அமைத்தார். கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு எல்லாம் அதிமுக வண்டியின் முன் எலுமிச்சை கட்டி தொங்கவிடப்பட்டு முற்றாக நசுக்கப்பட்டது.
ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதை கண்டித்து வெளியேறிய வைகோ, திராவிடம் என்பதை கட்சியின் பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்தேசிய கூடாரத்தில் சங்கமமானார். அவர் கண்ட மறுமலர்ச்சி சாதிய தமிழ்தேசியத்துக்கு பல்லக்கு தூக்குவதாகவே இருந்தது.
திராவிட கட்சிகளால் தான் இந்த நாடு சீரழிந்தது என பொங்கியெழுகிற தமிழ்தேசியவாதிகள் தங்களின் பிரதான எதிரியாக முன்னிலைப்படுத்துவது கருணாநிதியை மட்டும் தான். ஜெ வை கூட திராவிட லிஸ்ட்டில் வேண்டாவெறுப்பாக சேர்த்துக்கொள்கிற அவர்கள் வைகோவை அப்படி ஒருபோதும் எண்ணியதுமில்லை, பேசியதுமில்லை.
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பெண் விடுதலை, வர்க்க சமத்துவம் இது எதையும் முன்னிலைப்படுத்தாமல் முழுநேர பிரபாகர துதி பாடி தன்னை கடைந்தெடுத்த ஈழ வியாபாரியாக நிலைநாட்டிக்கொண்டவர் வைகோ. ரோமாபுரியிலே, கிரேக்கத்திலே, ஐரோப்பாவிலே, அமெரிக்காவிலே என்று நீட்டி முழக்க தெரிந்த வைகோவுக்கு உள்ளூர் தமிழகத்திலே ஒடுக்கப்படுகிற தமிழனை பற்றி சிந்திக்கமட்டும் நேரமிருந்ததேயில்லை.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர் வன்முறைகளுக்குள்ளாகி வரும் சூழலில் வைகோவின் நாக்கு சாதிக்கு எதிராய் எப்போதும் வார்த்தைகளை உதிர்த்ததேயில்லை. தமிழ்தேசியவாதிகள் சாதிய படுகொலைகளை பங்காளி சண்டைகள் என்று அடையாளப்படுத்துவதைப்போல சாதிய வன்முறைகள் அரங்கேறும்போதெல்லாம் ஆதிக்க சாதியின் குரலாகவே ஒலித்தவர் வைகோ.
அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டு நாடு முழுக்க ரத்த வெள்ளாறு ஓட செய்தபோது, அது குறித்த பாராளுமன்ற விவாதத்தில் ஒரு தேர்ந்த ஆர்எஸ்எஸ் காரரை போல அத்வானியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி முழங்கியவர் வைகோ. இந்த பேச்சினை அத்வானியும் வாஜ்பாயும் பாராட்டியதை தான் தனது பேச்சுதிறமைக்கான அங்கீகாரமாக முழங்குவார் மறுமலர்ச்சி திராவிட வைகோ.
ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் ஓரளவேனும் சிந்தித்து தெளிவான முடிவை எடுக்கிற வைகோ, சட்டமன்ற தேர்தல்களில் மட்டும் தெளிவாகவே சிந்தித்து அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடத்திற்கு குழிவெட்டியவர்கள் அண்ணாவும் எம்ஜிஆரும் என்றால் அதை மண்ணிட்டு மூடிய பெருமை வைகோவுக்கு தான்.

விஷ்ணுபிரியா (தற்)கொலை வழக்கு: படுகொலை செய்யப்படும் உண்மைகள்

விஷ்ணுபிரியா (தற்)கொலை வழக்கு: படுகொலை செய்யப்படும் உண்மைகள்! 




" வன்னிய சாதிவெறிக்கு பலி இளவரசன்..
கவுண்ட சாதிவெறிக்கு பலி கோகுல்ராஜ்..
அரசு மற்றும் அதிகாரிகளின் சாதிவெறிக்கு பலி டிஎஸ்பி விஷ்ணுபிரியா... "
ஜெ வின் அதிமுக அரசில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் வன்முறை எல்லாமும் லைசன்ஸ் தேவைப்படாத அல்லது காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் மறைமுக லைசன்ஸ் பெற்ற தொழில்களாகிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி இளவரசன் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் சவமாக கண்டெடுக்கப்பட்ட போது அது குறித்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. தடயவியல் நிபுணர்கள் சிலர் , ஒரு தற்கொலை என்பதற்கான எந்த அறிகுறியும் இளவரசன் விஷயத்தில் காணப்பட வில்லை என்பதை பல்வேறு லாஜிக்கல் பாயிண்ட்டுகளோடு விளக்கியுமிருந்தார்கள். ஆனாலும் அதன் பின் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இளவரசன் படுகொலை தற்கொலையாக சோடிக்கப்பட்டு வழக்கு இழுத்து மூடப்பட்டு உண்மை சவக்குழியில் புதைக்கப்பட்டது.
இளவரசன் படுகொலையில் ஊரறிந்த கொலையாளிகள் சாதி ஆதரவு அரசின் ஆசியோடு தப்பவிடப்பட்டதே அதே மாதிரியான மற்றொரு படுகொலையை அரங்கேற்றும் தைரியத்தை சாதி வெறி கொலையாளிகளுக்கு தந்தது எனில் அது கொஞ்சமும் மிகையல்ல. இளவரசனைக் கொன்ற அதே வழிமுறையில் கோகுல்ராஜும் கொல்லப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார். ஐஎஸ் தீவீரவாதிகள் தங்களிடம் பிணைய கைதியாக பிடிபட்ட ஒருவரை கழுத்தை அறுத்து கொல்வதற்கு முன் அவரை பேசவைத்து வீடியோ எடுத்து வெளியிடுவது போல் கோகுல்ராஜையும் மிரட்டி வீடியோ எடுத்து தப்பித்து விடலாமென கொலையாளிகள் திட்டமிட்ட வேளையில், கோகுல்ராஜின் தோழி உண்மையை வெளிப்படுத்தியதும் கோயில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்த கொலையாளிகள் நடமாட்டமும் அவர்களை வேறுவழியின்றி இந்த கொலை வழக்கில் சிக்க வைத்தது.
சாதியை இறுக அணைத்து உச்சி முகர்ந்து காப்பாற்றும் சாதி அரசும் சாதி அதிகாரிகளும் நிர்பந்தத்தின்பேரில் கொலைவழககாக பதிவு செய்து, சிலரை கைது செய்தாலும், படுகொலையின் முக்கிய சூத்திரதாரி யுவராஜ் கவுண்டனை எட்டக்கூட முடியாத நிலையொன்றை காட்சியமைத்து அவனை பத்திரமாக தப்பவிட்டார்கள்.
கோகுல்ராஜ் வழக்கை உடனடியாக சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென அப்போதே விடுதலை சிறுத்தைகள் உட்பட்ட பல கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால் எதற்கும் ஆளும் அதிமுக அரசு கொஞ்சமும் செவி சாய்க்கவில்லை. டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது குற்றத்தில் தொடர்பற்ற சிலரை கைது செய்ய மேலதிகாரிகளிடமிருந்து விஷ்ணுபிரியா அவர்களுக்கு தொடர் நெருக்குதல் வந்ததாக தெரிகிறது. இதன் மூலம் அப்பாவிகள் சிலரை வழக்கில் சிக்க வைத்துவிட்டு, உண்மையான குற்றவாளியான யுவராஜ் கவுண்டனை தப்பிக்க வைக்க அரசின் மேல்மட்டத்திலிருப்பவர்கள் மூலம் எடுக்கப்பட்ட முயற்சியாகவே இது தெரிகிறது. சில நாளிதழ்களில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் யுவராஜ் என்ற கவுண்ட சாதி வெறியன் சென்னையில் பதுங்கி இருந்ததாகவும், பின் அதே அமைச்சரின் ஆசியோடு யுவராஜ் பெங்களூருக்கு தப்பிச் சென்றதாகவும் செய்திகள் வெளியானதையும் இங்கு நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா அவர்கள் தற்கொலை செய்து கொன்றதாக கூறப்படும் நாளன்று அவர் தன் சக துறை தோழியான தன்னுடன் (டிஎஸ்பி மகேஷ்வரி அவர்களுடன்) பேசிக்கொண்டிருந்தபோது எஸ்பி லைனில் வருவதாக சொல்லி போனை துண்டித்தார், பின் அவரிடமிருந்து எந்த தகவலுமில்லை என்பதை குறிப்பிடும் டிஎஸ்பி மகேஷ்வரி அவர்கள் , இந்த மரணத்துக்கு உயரதிகாரிகளின் டார்ச்சர் தான் காரணம் என்பதை செய்தியாளர்கள் முன் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். தனது உயிருக்குயிரான தோழி, பணியில் நேர்மையாக இருக்க முயன்ற ஒரே காரணத்துக்காக தனது துறை மேலதிகாரிகளின் டார்ச்சர் அவரை கொன்றுவிட்டதை அவர் கதறியழுதபடி தெரிவித்தபோது சாதி அரசாங்கம் மற்றும் சாதி அதிகாரிகளின் மேல் நமது ஆவேசமும் உண்மையை மூடிமறைக்கும் இந்த அரசின் கயமைத்தனம் மீதான கோபமும் நமக்கு ஒருசேர வெளிப்படுகிறது.
இப்போது டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிற அரசு , கோகுல்ராஜ் கொலை வழக்கையும் அதே சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவித்திருக்கிறது. ஆனால் தற்கொலைக்கு முன் விஷ்ணுபிரியா அவர்கள் எழுதியதாக கூறப்படும் கடிதத்திலேயே சில பக்கங்களை எடுத்து மறைப்பவர்கள் விசாரணையை மட்டும் நேர்மையாக கொண்டு செல்வார்கள் என்பதை கனவிலும் நினைக்க முடியவில்லை. அனைத்து கட்சி மற்றும் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இந்த அரசு உடனடியாக இந்த இரு வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். யுவராஜ் இத்தனை நாட்களாக போலீஸிடம் சிக்காமல் தப்பிக்கும் பின்னனியில் யார் இருந்தது என்பதையும் மக்களுக்கு சொல்லியாக வேண்டும்.
மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் டார்ச்சர்களால் அரசு அதிகாரிகளே தற்கொலைக்கு தள்ளப்படுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்படுகொலைகளுக்கு உள்ளாவதும் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய அரசு எந்திரம் சாதி அகோரப்பல் காட்டி சிரிப்பதும் த்தூ த்தூ த்தூ வென இந்த ஒட்டுமொத்த அரசின் மீதும் நம்மை காறி உமிழ வைக்கிறது. இனியேனும் இந்த அரசு நேர்மையான விசாரணைக்கு ஆவன செய்து தன் மீதான எச்சிலை துடைத்துக்கொள்ளட்டும்!
- லியோ

விசிக தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?

விசிக  தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? 




விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை தான். ஆனால் அவரை விமர்சிப்பவர்களின் உள்நோக்கம் வெள்ளிடைமலையாக தெரிகிறது.
ஆதிக்க சாதியினரின் விமர்சனங்களில் , இவனால் தானே இந்த பற பயலுவலாம் நமக்கு சமமா அரசியல் செய்ய, பேச செய்கிறார்கள் என்ற ஜாதி வன்மமும் சில தாழ்த்தப்பட்ட பிரிவினர்களின் விமர்சனங்களில் தங்கள் சொந்த சாதியின் மீதான சுய ஜாதி போதையும் தான் பீய்ச்சியடிக்கிறது.
மற்றபடி தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் முன், அவருக்கு மாற்றாக , அவரைவிட எல்லா வகையிலும் சிறந்த ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடிகிறதாவெனில், இல்லை.
இன்று என்னைப் போன்ற சாதாரண பாமரன்களும் அரசியல் பேச முடிகிறதெனில் அதற்கு அண்ணல் அம்பேத்கரின் ஒளியை சேரி இருட்டில் பாய்ச்சிய தலைவர் திருமாவளவன் தான் காரணம்.
விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிறை குறைகளோடு தான் அதனை ஆதரிக்கிறோம். எங்களுக்கு தெரியும் இது போதுமானதல்ல என்று. ஆனால் நாங்கள் கரையேற இந்த துரும்பை விடவும் இப்போது வேறு மாற்று இல்லை எனும் போது அதை இறுகப் படிப்பதே எங்கள் அறிவார்ந்த பாதையாக இருக்க முடியும்.
தலைவர் திருமாவளவன் ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என சிலர் குற்றப்பட்டியல் வாசிக்கிறார்கள். சமூக நீதி, சமத்துவம் பேசி பல ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிடக் கட்சிகளால் பட்டியலின மக்களுக்கு மிஞ்சியது துரோகம் மட்டுமே.
திராவிடத்திற்கு மாற்று என கூவும் தமிழ்தேசியவாதிகளின் சாதி நோய் முற்றி நாற்றமெடுத்து ஓட வைக்கிறது. அப்படி இருக்க எங்களுக்கான எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடி வெல்ல வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்தே இருக்கிறோம்.
எந்த குறிப்பிட்ட சாதியையும் தன் அடையாளப்படுத்தாமல் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஏன் இதர பிற்படுத்தப்பட்ட , முன்னேறிய சாதிகளின் பெயரால் கட்சி நட த்துகிற தலைவர்களின் வஞ்சிப்பிற்கு உள்ளாகிற மக்களுக்காகவும் சேர்த்தே பாடுபடுகின்ற ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான்.
எங்கள் கைகளை ஒன்றிணைத்து அதை பலப்படுத்துவது தான் எங்கள் முன் உள்ள பணியே அல்லாமல் நீலி கண்ணீரோடு தலைவர் திருமாவளவனை எங்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என எண்ணி பொய்யுரைகளை புழுதிவாறி தூற்றினால் நாங்கள் மயங்கி போவோம் என எண்ணியிருப்பின், உங்களுக்கு பரிசளிக்க எங்களிடம் ஏமாற்றம் மட்டுமே இருக்கிறது.

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?




முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?
ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் கட்டாயம் தேவை என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தங்கள் மாநிலத்திலுள்ள சாதக அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு விளக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால் இந்த மாநாடு நடைபெற்ற காலமும் விதமும் அதன் நோக்கமும் தான் முகம் சுளிக்க வைக்கிறது.
ஆளும் அரசிற்கு உண்மையிலேயே மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை இருந்திருக்குமேயானால் ஆட்சிக்கு வந்த முதல் இரு ஆண்டுகளில் இப்படியான முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீடுகளைப் பெற்று அடுத்த மூன்று ஆண்டுகளில் அழகான தொடக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் நடந்தது என்ன?
முதல் சில ஆண்டுகளும் 110விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவதை மட்டுமே ஜெ தனது ஆட்சியின் முழுநேர வேலையாகக் கொண்டிருந்தார். அப்படி வெளியிடப்பட்ட அறிவிப்புகள் யாவும் கோப்புகளிலேயே முடங்கி கிடக்கின்றன. அடுத்த ஒரு வருட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். கொட்டாவி விடக் கூட ஜெ கை காட்டினால்தான் ஆச்சு எனுமளவிற்கு பவ்ய பன்னீராக உலாவந்தார். பட்ஜெட் கூட்ட தொடர் கூட பத்திரிக்கைகள் காறி உமிழ்ந்த பிறகு தான் வேண்டா வெறுப்போடு கூட்டப்பட்டது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாத காரணத்தால் எல்லா துறைகளும் முற்றாகவே முடங்கி போயின.
அப்போதே நடக்க வேண்டி திட்டமிடப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஜெ மீண்டும் கோட்டை வந்த பின் நடத்த வசதியாக மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. குமாரசாமி கணக்கால் மீண்டும் கோட்டைக்கு வந்த ஜெ வின் உடல்நிலைப் பற்றி பல்வேறு யூக செய்திகள் வெளிவந்தன. அரசு சார்பிலேயே அவருக்கு உடல்நலம் சரியில்லை என அறிக்கை வெளியிடப்பட்டது.
மே மாதம் நடக்கவிருந்த மாநாடும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவரின் உடல்நிலையை காரணம் காட்டாமல் மே மாத வெயில் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தான் கலைஞர் தனக்கேயுரிய பாணியில், மே மாதம் வெயிலடித்தால் செப்டம்பரில் மழையடிக்குமே என அப்போது கிண்டல் செய்திருந்தார்.
ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்போது கூட்டப்பட்டிருக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டால் நமது மாநிலத்திற்கு என்ன பயன்? மாநாடு நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அது நடைமுறைக்கு வரும்போதுதான் உண்மையான முதலீடு எவ்வளவு என்பது தெரியவரும். கிடப்பில் கிடக்கிற பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களே இதற்கு சாட்சி.
இனிமேல் ஆட்சி முடிவதற்கு முன் உடனடியாக எந்த முதலீடும் வர வாய்ப்பில்லை. முதலீட்டாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சசிகலா தன்னிடமுள்ள கருப்பு பணத்தை தனது பினாமிகள் மூலம் கொட்டி தொழில் தொடங்கினால் தான் ஆச்சு. ஆனால் இந்த மாநாட்டை ஆட்சியின் தொடக்கத்தில் நடத்தியிருந்தால் இதன் பாதையே வேறு.
ஆனால் இப்போது தேர்தல் காலத்தில் இத்தனை லட்சம் கோடி முதலீடு என வெற்று பம்மாத்து காட்டி மக்கள் தலையில் மஞ்சள் அரைக்க மட்டும் தான் இந்த மாநாடு உதவும் . ஏதோ அதிமுக கட்சி மாநாடு போல கொடி தோரணங்களோடு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருப்பவர்களை நினைத்தால் ஒரு படத்தில் வடிவேலு தனது டவுசர் பாக்கெட்டுகளில் கைவிட்டு உள்துணியை இழுத்துக்காட்டி , ஒண்ணுமில்லையே என ஒய்யாரமாக நடந்து போகிற காட்சிதான் நினைவுக்கு வருகிறது.தலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?
ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் கட்டாயம் தேவை என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தங்கள் மாநிலத்திலுள்ள சாதக அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு விளக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால் இந்த மாநாடு நடைபெற்ற காலமும் விதமும் அதன் நோக்கமும் தான் முகம் சுளிக்க வைக்கிறது.
ஆளும் அரசிற்கு உண்மையிலேயே மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை இருந்திருக்குமேயானால் ஆட்சிக்கு வந்த முதல் இரு ஆண்டுகளில் இப்படியான முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீடுகளைப் பெற்று அடுத்த மூன்று ஆண்டுகளில் அழகான தொடக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் நடந்தது என்ன?
முதல் சில ஆண்டுகளும் 110விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவதை மட்டுமே ஜெ தனது ஆட்சியின் முழுநேர வேலையாகக் கொண்டிருந்தார். அப்படி வெளியிடப்பட்ட அறிவிப்புகள் யாவும் கோப்புகளிலேயே முடங்கி கிடக்கின்றன. அடுத்த ஒரு வருட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். கொட்டாவி விடக் கூட ஜெ கை காட்டினால்தான் ஆச்சு எனுமளவிற்கு பவ்ய பன்னீராக உலாவந்தார். பட்ஜெட் கூட்ட தொடர் கூட பத்திரிக்கைகள் காறி உமிழ்ந்த பிறகு தான் வேண்டா வெறுப்போடு கூட்டப்பட்டது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாத காரணத்தால் எல்லா துறைகளும் முற்றாகவே முடங்கி போயின.
அப்போதே நடக்க வேண்டி திட்டமிடப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஜெ மீண்டும் கோட்டை வந்த பின் நடத்த வசதியாக மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. குமாரசாமி கணக்கால் மீண்டும் கோட்டைக்கு வந்த ஜெ வின் உடல்நிலைப் பற்றி பல்வேறு யூக செய்திகள் வெளிவந்தன. அரசு சார்பிலேயே அவருக்கு உடல்நலம் சரியில்லை என அறிக்கை வெளியிடப்பட்டது.
மே மாதம் நடக்கவிருந்த மாநாடும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவரின் உடல்நிலையை காரணம் காட்டாமல் மே மாத வெயில் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தான் கலைஞர் தனக்கேயுரிய பாணியில், மே மாதம் வெயிலடித்தால் செப்டம்பரில் மழையடிக்குமே என அப்போது கிண்டல் செய்திருந்தார்.
ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்போது கூட்டப்பட்டிருக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டால் நமது மாநிலத்திற்கு என்ன பயன்? மாநாடு நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அது நடைமுறைக்கு வரும்போதுதான் உண்மையான முதலீடு எவ்வளவு என்பது தெரியவரும். கிடப்பில் கிடக்கிற பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களே இதற்கு சாட்சி.
இனிமேல் ஆட்சி முடிவதற்கு முன் உடனடியாக எந்த முதலீடும் வர வாய்ப்பில்லை. முதலீட்டாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சசிகலா தன்னிடமுள்ள கருப்பு பணத்தை தனது பினாமிகள் மூலம் கொட்டி தொழில் தொடங்கினால் தான் ஆச்சு. ஆனால் இந்த மாநாட்டை ஆட்சியின் தொடக்கத்தில் நடத்தியிருந்தால் இதன் பாதையே வேறு.
ஆனால் இப்போது தேர்தல் காலத்தில் இத்தனை லட்சம் கோடி முதலீடு என வெற்று பம்மாத்து காட்டி மக்கள் தலையில் மஞ்சள் அரைக்க மட்டும் தான் இந்த மாநாடு உதவும் . ஏதோ அதிமுக கட்சி மாநாடு போல கொடி தோரணங்களோடு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருப்பவர்களை நினைத்தால் ஒரு படத்தில் வடிவேலு தனது டவுசர் பாக்கெட்டுகளில் கைவிட்டு உள்துணியை இழுத்துக்காட்டி , ஒண்ணுமில்லையே என ஒய்யாரமாக நடந்து போகிற காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகளும் (?) ஈழமும்

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகளும் (?) ஈழமும்




வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகள் என்ற சொற்பதத்தை படித்ததும் என்னால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. வைகோ வை எனக்கு பிடிக்கும், பிடிக்காது என்பதல்ல விஷயம். ஆனால் வைகோ பெரியாரிஸ்டுகள், கருணாநிதி பெரியாரிஸ்டுகள், பிரபாகரன் பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் பிராண்டட் பெரியாரிஸ்டுகளை பார்க்கும் போது நகைப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஒரு பகுத்தறிவாளனுக்கு மக்கள் பற்றை தவிர, இனம், மொழி, தேசியம் குறித்த பற்றெல்லாம் அறவே கூடாது என்கிறார் பெரியார். இதன் பொருள் பகுத்தறிவாளன் நாட்டைப் பற்றியோ, இனம் , மொழி பற்றியோ கொஞ்சமும் கவலைப்படக்கூடாது என்பதோ அவைகளைப் பற்றி சிந்திக்க கூடாதோ என்பதல்ல. எந்த ஒரு செயலும் மக்களை , மக்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி தான் அமைய வேண்டும் என்பதே.
ஆபாச புராண, இதிகாச கதைகளின் குப்பையாக காணப்படுகிற தமிழ் இலக்கியங்களை கண்டித்த தந்தை பெரியார் தான், மக்கள் எளிதாக பயன்படுத்தும்படி மாபெரும் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். காங்கிரசை மிக கடுமையாக எதிர்த்த பெரியார் தான், காமராஜரை ஆதரிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ஒன்றை எதிர்ப்பதாயினும், ஆதரிப்பதாயினும் மக்கள் நலனை மட்டுமே கண்முன் கொண்டு சிந்தித்தனால் மட்டுமே பெரியாரால் அப்படி செயல்பட முடிந்தது. பகுத்தறிவாளனின் இயல்பும் அழகும் அது தான்.
ஆனால் கடவுள் மறுப்பை மட்டுமே பகுத்தறிவாக, பெரியாரிசமாக முன்னெடுப்பவர்கள் தான் நாளடைவில் ஏதேனும் ஒரு தனிநபர் ஆதரவு நிலையெடுத்து பிராண்டட் பெரியாரிஸ்டுகளாய் உருவெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களை பெரியாரிஸ்டுகளாய் காட்டிக்கொண்டே, பெரியாரியக் கொள்கைகள் நீர்த்துபோகச் செய்யும் வேலையையும் இவர்கள் செவ்வனே செய்கிறார்கள்.
பெரியாரை படித்தவருக்கு அம்பேத்கர் அந்நியமாய் பட நியாயமில்லை. அம்பேத்கரைப் படித்தவருக்கு பெரியார் அந்நியமாய் பட நியாயமில்லை. இருவரது நோக்கமும் கொள்கையும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் தங்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிற சிலர் திட்டமிட்டே அண்ணல் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள், ஒதுக்கி வைக்கிறார்கள். தங்களை அம்பேத்கரிஸ்டுகள் என்று காட்டிக்கொள்கிற சிலர் , தந்தை பெரியாரை தலித் மக்களின் விரோதி என சித்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
பெரியாரையும் அம்பேத்கரையும் ஒருவர் மாற்றி ஒருவர் புறக்கணிக்கிற இவர்கள், பிரபாகரன் என்று சொன்னால் மட்டும் கூட்டாக சேர்ந்து காவடி தூக்க முண்டியடிக்கிறார்கள். கடவுளேயாயினும் கேள்வி கேட்ட பூமியில் கடவுளுக்கும் மேலானவராக பிரபாகரனை உயர்த்தி , எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவராக அவரை காக்க துடிக்கிறார்கள்.



பிரபாகரன் பெயரோடு வாழ்க என்பதை தவிர வேறு எதை சேர்த்து சொன்னாலும் உடனடியாக தமிழின துரோகி பட்டம் கட்டி தங்கள் தமிழினப் பற்றை பறை சாற்றுகிறார்கள். ஆனால் மூச்சுக்கு முன்னூறு முறை இவர்கள் உச்சரிக்கிற தமிழினப் பற்றை அலசிப்பார்த்தால் ஒரே சாதி வெக்கையாக இருக்கிறது.
கடல்கடந்து இருக்கிற இலங்கை நாட்டில் சிங்கள ஆதிக்கவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தி கொன்று குவிக்கிறார்கள், தமிழீழம் வேண்டும், ஒழிக சிங்கள பவுத்த ஆதிக்கம், வளர்க தமிழ் தேசியம் என்று கூவி தங்கள் இனப்பற்றை காட்ட தெரிந்தவர்களுக்கு இங்கே, இதே நாட்டில், இதே ஊரில், இதே தெருவில் நடக்கிற எதுவும் காதுக்கு எட்டுவதுமில்லை, கண்ணுக்கு புலனாவதுமில்லை.
ஆதிக்க சாதி வெறியர்களின் திட்டமிட்ட வன்முறைகளால் ஆண்டாண்டு காலமாக அடிப்பட்டு மிதிப்பட்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரோ கூக்குரலோ அவர்களுக்கு அந்நியமாய் படுகிறது. எதுவெல்லாம் ஈழத்தில் நடக்கும் அநீதி என பொங்குகிறார்களோ அவைகளை மிஞ்சிய அநீதிகள் இங்கும் தினந்தோறும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எவையெல்லாம் ஈழத்திற்கு தேவையோ, அதே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டிதான் இங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லை தாண்டி நீளும் உங்கள் இரக்கம் மிகுந்த கைகள், எதிரே வீழ்த்தப்படுகிற தாழ்த்தப்பட்டவனைக் கண்டால் மட்டும் முடக்கிக்கொள்கிறது.
தங்களை அம்பேத்கரிஸ்டுகள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர்கள் என்பவர்களும் பிரபாகரனைக் கொண்டாடுவதில் காட்டும் முனைப்பை தந்தை பெரியாரை கொண்டாடுவதில் காட்டுவதில்லை.
ஆதிக்க சாதியினர் பிரபாகரனை, தமிழ் தேசியத்தை கொண்டாடுவதில் லாபமிருக்கிறது. தமிழராக இணையுங்கள் என்று கூவிக்கொண்டே தங்களின் சாதி அக்கிரமங்களை மூடி மறைக்க அல்லது பங்காளி சண்டை என்று அதை நியாயப்படுத்திக்கொள்ள பிரபாகர முகமூடி அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
ஆனால் தன் மண்ணில் சாதிக்க முடியாத சமத்துவத்தை, சுதந்திரத்தை , சகோதரத்துவத்தை ஈழத்தில் மட்டும் சாதித்துவிட முடியுமென முஷ்டி உயர்த்துவது அப்பட்டமான , மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம்.
திமுகவை எதிர்க்கிற தமிழ்தேசியவாதிகள் கூட வைகோவிடம் தங்கள் திராவிட எதிர்ப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு வாலை குழைக்க அவரின் ஆதிக்க சாதிக்கு ஆதரவான தமிழ்தேசிய பற்றும் காரணம்.
பிரபாகரன், வைகோ, ஜெயா, கருணாநிதி என எந்த தனிப்பட்ட நபர் ஆதரவு நிலை கொண்டும் பகுத்தறிவாளனாய் இருக்க முடியாது. தனி நபர் துதி மதியை மழுங்கடிக்கிற யுக்தி. பிரபாகரனை கொண்டாடுங்கள், ஆனால் அந்த கொண்டாட்டங்களினால் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு துளி நன்மையுமில்லை. ஆனால் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒரு சேர முன்னெடுப்பது பார்ப்பனியத்திற்கெதிரான மாபெரும் ஆயுதம். நீங்கள் யார் என்பதை பகுத்தறிவின் துணைகொண்டு நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
- லியோ

Saturday, May 28, 2016

மக்கள் நலக் கூட்டணி ஏன் தோற்றது?

மக்கள் நலக் கூட்டணி ஏன் தோற்றது? 


வெற்றி எப்படி பெற்றதாயினும் வாழ்த்துக்குரியதாகவும் தோல்வி எப்படி வந்ததாயினும் பரிகாசத்திற்குரியதாகவும் தொடர்ந்து வரும் சூழலில், மக்கள் நலக் கூட்டணி ஏன் தோற்றது என்ற கேள்வியும் கூட அர்த்தமற்றதாக தோன்றலாம். இதுவென்ன கேள்வி, மக்கள் திராவிடக் கட்சிகளை மட்டும் தான் நம்புகிறார்கள், அதை தாண்டி இதில் யோசிக்க என்னவிருக்கிறது என சிலர் கேட்கக் கூடும். எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஒருவர் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப் போனார், பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் வெள்ளம் ஆர்ப்பரித்த திருமாவளவன் அவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை, முதல் முறையாக கம்யூனிஸ்ட்கள் ஒருவர் கூட இல்லாத சட்டசபை அமைந்திருக்கிறது. ஆம், நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த உண்மைகளில் ஒன்றை கூட மறுக்கவில்லை. ஆனால் மக்கள் நலக் கூட்டணி ஏன் தோற்றது? அது கூட்டணியின் தோல்வியா, மக்களின் தோல்வியா? ஒரு உன்னத அரசியலை முன்வைத்த கூட்டணி ஏன் இப்படியொரு வீழ்ச்சியை சந்தித்தது என்பதையெல்லாம் இப்போதும் நாம் யோசித்து பார்ப்பவர்களாக நாம் இல்லையே என்பது பரிதாபத்துக்குரிய ஒன்று தான். 
1. கூட்டணியின் நம்பகத்தன்மையை சிதைத்த ஊடகங்கள் 
தேர்தல் பரபரப்பு தொற்றிய ஆரம்ப காலக் கட்டங்களில் விஜயகாந்த் எந்த அணிக்கு செல்வார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு போனால் திமுக நிச்சயம் வெற்றி பெறும், பாஜக கூட்டணிக்கு போனால் பாஜக திராவிட கட்சிகளுக்கு கடினப் போட்டியாக களத்தில் நிற்கும் என்றெல்லாம் ஆரூடம் கூறிய ஊடகங்கள், விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியை தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. விசிக மதிமுக, கம்யூனிஸ்ட்கள் என்றளவில் மட்டும் இருந்தால் தங்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்றிருந்த திராவிடக் கட்சிகள் விஜயகாந்த் அந்த அணியில் சேர்ந்த பிறகு ஊடகங்களுக்கு பணத்தை வாரியிறைத்து மக்கள் நலக் கூட்டணியின் மீது எதிர்மறை பிம்பத்தை மக்களிடம் கட்டியமைத்தார்கள். இந்த திட்டமிடப்பட்ட சூழ்ச்சி நிறைந்த, பணத்திற்காக மலத்தை விழுங்கிய ஊடகங்களின் மனசாட்சியற்ற போக்கு தான் மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு முதன்மையான காரணம் என நினைக்கிறேன். 
2. விஜயகாந்த் மற்றும் ஜி கே வாசனின் வியாபார அரசியல் 
அரசியல் என்பதே வியாபாரமாகி விட்டது நாமெல்லாம் அறிந்த ஒன்று தான் என்றாலும் அந்த வியாபார பேரத்தை பகிரங்கமாக வெளிப்படையாக மேற்கொண்ட விஜயகாந்த் மற்றும் ஜி கே வாசன் ஆகியோரின் அருவருக்கத்தக்க போக்கு கட்சி கடந்து எரிச்சலை விதைத்தது. பிஜேபி, திமுக இரண்டு கூட்டணியிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள், அளவுக்கதிகமான சீட்டுகள், பண பேரம் என அனைத்தையும் கடைசி வரை முன் வைத்த விஜயகாந்த், எந்த பேரமும் படியாத கடைசி நொடியில் மக்கள் நலக் கூட்டணியை வந்தடைந்ததும் அங்கும் தான் தான் முதல்வர் வேட்பாளர் என அடம் பிடித்ததும் மக்கள் நலக் கூட்டணியை கேப்டன் கூட்டணி என பெயர் மாற்றம் செய்ததும் பிறகு கேப்டன் மக்கள் நலக் கூட்டணி என நீட்டி முழக்கியதும் கட்சிகளிடையே ஒருமித்த உணர்வு இல்லாததையும் விஜயகாந்த்தின் எல்லா இழுப்புக்கும் பணிந்து கேப்டன் நலக் கூட்டணியாக பரிணாமம் பெற்றதும் இந்த வீழ்ச்சிக்கு காரணம். எந்த கட்சியின் மீதும் ஆழ்ந்த பிடிப்பில்லாது இருந்த வாக்காளர்களிடம் இப்படியான செய்திகள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டதன் விளைவு அவர்கள் மக்கள் நலக் கூட்டணியின் மீதான நல்லெண்ணத்தை முற்றாக மாற்றிக் கொண்டார்கள். 
இப்படியே கடைசி வரை போயஸ் கார்டன் வாசலில் காத்துக் கிடந்து அவர்கள் காறி துப்பி வெளியே துரத்திய பிறகு மக்கள் நலக் கூட்டணியில் சரண்டரான ஜி கே வாசனின் கட்சியாலும் கூட்டணியின் மதிப்பு பல மடங்கு கீழ் நோக்கி சரிந்ததேயொழிய ஒரு சிறு லாபமும் ஏற்படவில்லை. ஒரே ஒரு மாற்றம் கூட்டணியின் பெயர் கேப்டன் மக்கள் நலக் கூட்டணி தமாகா என கொஞ்சம் விரிவடைந்தது மட்டும் தான். 
விஜயகாந்த் பிரேமலதா சுதீஷ் ஆகியோரின் பக்குவமற்ற பேச்சு


விஜயகாந்த் அங்கங்கே மேடையில் உளறிக் கொட்டினார் என்றால் பிரேமலதாவும் சுதீஷும் ஒருவித ஆணவப் போக்குடன் பேசியவைகளை இங்கு பட்டியலிட தொடங்கினால் அதற்கே தனிக்கட்டுரை எழுத வேண்டியிருக்கும். கேப்டன் ஒருவரே அகில உலகத்தையும் ஜீவிக்க பிறந்தவர் என்பதாகவும் அதீத நம்பிக்கையும் மக்களிடையே ரசிக்கப்படவில்லை. 
வைகோவின் அந்தர்பல்டி அரசியல்
வைகோ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற நாள் முதலே தனது பொறுப்பற்ற பேச்சுகளால் கூட்டணியை தொடர்ந்து சின்னாபின்னமாக்கினார். ஒவ்வொரு திருவிழாவுக்கும் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவிப்பது தன் வழக்கம் என்பதை சொல்ல இந்த கறுப்பு துண்டு காவிக்கு கொஞ்சமும் வெட்கமே இருக்கவில்லை. சாதி ஓட்டுக்களை குறி வைத்து வைகோ ஆரம்பித்த சாதி பேச்சும் அதையே காரணமாக காட்டி வைகோ தேர்தலில் பின்வாங்கியதும்கூட்டணி மீதான நம்பகத்தன்மையை குறைத்தது. அதுவுமல்லாமல் இந்த தேர்தல் என்பதே தனக்கும் ஸ்டாலின் கருணாநிதிக்கும் இடையேயான பங்காளிச் சண்டை என்கிற ரீதியில் தொடர்ச்சியாக வெளிப்பட்ட வைகோவின் பேச்சுக்கள், சிலர் மிக தந்திரமாக முன் வைத்த அதிமுக வின் B டீம் என்பதையும் வைகோ ஜெயாவிடம் 1500 கோடி பேரத்திற்கு விலை போய் விட்டார் என்பதையும் உண்மையாக இருக்குமோ என மற்ற கட்சி சார்ந்தவர்களையும் கட்சி சார்பற்றவர்களையும் சேர்த்து மக்கள் நலக் கூட்டணியை சார்ந்த தொண்டர்களையும் கூட யோசிக்க வைத்து விட்டது. 
பரந்த கட்டமைப்பு இல்லாத கட்சிகளின் கூட்டு 
விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட்கள்,தமாகா, மதிமுக உட்பட்ட கூட்டணியின் எந்த கட்சிக்கும் தமிழகம் அளவில் பரந்துபட்ட கட்சி கட்டமைப்பு இல்லை. இக்கட்சிகள் தொடர்ந்து மிக குறைவான இடங்களிலேயே போட்டியிட்டு வந்ததன் விளைவோ என்னவோ, இக்கட்சிகள் தங்களுக்கு மிக சாதகமான தொகுதிகளை தவிர பிற பகுதிகளில் தங்கள் கட்சிக்கென ஒரு வலிமையான கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை, அப்படியான ஒன்று பிற்காலத்தில் தேவைப்படும் என்பதை கூட யோசித்து இந்த கட்சிகள் கடந்த காலங்களில் வேலை செய்திருப்பதாய்தெரியவில்லை. வட மாவட்டங்களில் வலிமையான வாக்கு வங்கியை உடையதாக கருதப்படுகிற விசிக கூட்டணி கட்சிகளுக்கு தங்களுக்கு சாதகமான பல தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டி இருந்தது. விசிகவிற்கு சாதகமான தொகுதிகளிலும் கூட அந்த கட்சி தோற்க காரணம் இதற்கு முந்தைய தொகுதிகளில் குறிப்பிட்டிருந்தது போல விஜயகாந்த், வைகோ, பிரேமலதா, சுதீஷ், ஊடகங்கள் ஆகியவை சம பங்கு ஆற்றினாலும் விசிகவை தோற்கடித்தே ஆக வேண்டும் என கட்சி கடந்து சாதி வெறியர்கள் இணைந்து செயல்பட்டதும் பட்டியலின மக்களிடையே பரவலான ஆதரவை பெறும் வகையில் கட்சியின் செயல்பாடு கடந்த காலங்களில் அமையாமல் போனதும் தான் காரணமென நினைக்கிறேன். எல்லா தொகுதிகளை போலவும் ஏன் மற்ற தொகுதிகளை விடவும் அதிகமாக, விசிகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் மற்ற சாதி கூட்டு கட்சிகள் பணத்தை வாரி இறைத்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முடிவா? தொடக்கமா? 


இந்த தேர்தலின் தோல்வி பலவகையிலும் நம்மை சோர்வடையச் செய்திருக்கலாம். ஆனால் நாம் வீழ்ந்தே கிடப்பவர்கள் அல்ல. எத்தனையோ வீழ்ச்சிகளை, எதிர்ப்புகளை கடந்து வந்ததே நம் பாதை. யார் நம் கொள்கைகளோடு பாரிய அளவில் தொடர்ந்து இணைந்து செயல்பட கூடியவர்கள் என்பதை மீளாய்வு செய்து மக்கள் நலக் கூட்டணியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மக்கள் நலக் கூட்டணி தோற்றது என்பதில் மேற்கண்ட காரணிகள் அனைத்தையும் விட நம் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் அதிகார பலம் பெறுவதே சமத்துவ சமூகத்திற்கான முதல்படி என்னும் சாதி ஒழிப்பு உணர்வு நம்மிடம் இல்லாமல் போனதில் பெரும் வியப்பில்லை.  வெளிப்பூச்சுக் கல்லறைகள் யார் என்பதை இந்த தேர்தல் நமக்கு வெளிக் காட்டியிருக்கிறது.  ஆனால் ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிந்து கூட்டாட்சி மலர வேண்டும் என்ற உயரிய ஜனநாயக உணர்வு கூட உங்களிடம் இல்லாமல் போனது ஏன்?  உங்கள் சாதி கரையான் மூளையை முழுதுமாக அரித்து தின்றுவிட்டது தான் காரணமா?  நாம் ஆளும் வர்க்கமாக மாற வேண்டும் என்பதல்ல, இங்கு அடிமை வர்க்கம் என யாரும் தொடரக் கூடாது என்பதான லட்சியம் உங்களுக்கு கசந்துபோக காரணம் என்ன?  இப்போதும் சிந்தியாமல் ஆட்டு மந்தைகளாய் மக்கள் நலக் கூட்டணியை விமர்சிக்கிறோம் என்கிற பெயரில் கேலியோடு நம்மால் இந்த வீழ்ச்சியை கடக்க முடிகிறதெனில் யார் பரிதாபத்துக்குரியவர்கள்? 
என் இனிய தோழமைகளே! நமது போராட்டம் வெற்றி தோல்விகளை சார்ந்தது மட்டுமே அல்ல, அது நம் இருத்தலுக்கானது, வாழ்விற்கானது. என்று நம் போராட்ட உணர்வை கைவிடுகிறோமோ அப்போதே அந்த கணமே மண்மூடி புதைக்கப்பட்டு விடுவோம். சிலருக்கு வாழ்க்கையே போராட்டம், நமக்கு போராட்டம் தான் வாழ்க்கையே. குறைகள் களைந்து தொடர்ந்து பயணிப்போம்!

குரலற்றவர்களின் குரலாக


என் இனிய தோழமைகளே,

ஏதேனும் உருப்படியாக எழுத வேண்டும் என்பது என் நீண்டகால ஆசை.  நல்லதோ கெட்டதோ மனதில் பட்டதை பளிச்சென உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அரசியல்,  சமூகம், கல்வி என எந்த தளமாகினும் எதுவெல்லாம் என்னை பாதிக்கிறதோ அதையெல்லாம் உங்களோடு ஆத்மார்த்தமாக தொடர்ந்து பேச வேண்டும் என்பதே இந்த வலைப்பூ தொடங்க ஒரே காரணம்.  எனக்கு கோர்வையாகவோ, படிப்பவர்கள் மனம் வசியப்படும் வித்தை நிறைந்த வார்த்தை ஜாலங்களோடு எழுதும் வித்தையோ எனக்கு சுட்டு போட்டாலும் வராது. இருந்தாலென்ன, வாங்க பேசலாம்!

தோழமையுடன்,
லியோ